Skip to main content

கூரிய ஆயுதத்தால் பெண் கொலை: தாயும் மகளும் கைது- நுவரெலியாவில் சம்பவம்!

 


நுவரெலியாவின் திம்புள்ள-பத்தன பகுதியில் தாயும் மகளும் இணைந்து பெண்ணொருவரை கொலைசெய்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.

கணவனுக்கு இருந்த இரண்டாவது மனைவியையே, முதலாவது மனைவி அவரது மகளுடன் இணைந்து கூரிய ஆயுதத்தால் வெட்டியுள்ளார் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்றுள்ளதாக திம்புள்ள-பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில், திம்புள்ள-பத்தனை பொலிஸ் பிரிவின் கிறேக்கிலி தோட்டம் பொரஸ்கிரிஸ் பிரிவைச் சேர்ந்த விஸ்வநாதம்மா (வயது-42) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கணவரை விட்டு முதலாவது மனைவி பிரிந்த நிலையில், கணவர், இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், நீண்ட காலத்தின் பின்னர், முதலாவது மனைவி கணவர் வீட்டுக்கு மீண்டும் சென்றநிலையில் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

அத்துடன், குறித்த குடும்பத்தில் மனைவிமார்களுக்கு இடையில் மிக நீண்ட நாட்களாக சண்டை, சச்சரவு இருந்து வந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தக் கொலையை அடுத்து, முதலாவது மனைவி மற்றும் மகள் ஆகியோர் அங்குள்ள காட்டுப் பகுதிக்குள் தப்பிச் சென்றிருந்த நிலையில், பின்னர் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, உயிரிழந்த பெண்ணின் சடலம் கொட்டகலை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் கொலை தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Comments