Skip to main content

இலங்கை போக்குவரத்து சேவையினருக்கான அறிவித்தல்

 


இலங்கை போக்குவரத்து சபையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 5 வருடங்களுக்கு அதிகமான அனுபவமுள்ள அனைத்து ஊழியர்களையும் நிரந்தரமாக்க நடவடிக்கை எடுப்பதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் (23) இடம்பெற்ற போக்குவரத்து அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கூட்டத்தில் அவர் இதனை குறிப்பிட்டார்.

இதேவேளை, நீண்டகாலமாக நிலவிவரும் சாரதி ஆலோசகர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு எதிர்வரும் மே மாதத்தில் உரிய பரீட்சையை நடாத்தி இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் இங்கு தெரிவித்தார்.

நாடு பூராகவும் காணப்படும் உப டிப்போக்களை பஸ் தரிப்பிடங்களாக மட்டும் பயன்படுத்துவதற்கும், அவை தொடர்பான நிர்வாக நடவடிக்கைகளை பிரதான டிப்போக்கள் ஊடாக மேற்கொள்வதற்கும் அதன் மூலம் நாடு பூராகவும் பஸ் போக்குவரத்தை முறைமைப்படுத்தவும் வினைத்திறனான சேவையாக மாற்றுவதற்கும் அமைச்சு நடவடிக்கை எடுத்துவருவதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

நகர்ப்புற வாகனங்களை கையாள்வது தொடர்பான முடிவுகளை எடுக்கும் உள்ளூராட்சி போக்குவரத்துக் குழுக் கூட்டங்களில் போக்குவரத்து அமைச்சை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரி ஒருவரின் பங்குபற்றலின் முக்கியத்துவத்தை பாராளுமன்ற உறுப்பினர்கள் இங்கு சுட்டிக்காட்டினர்.

இதனால் நகர்ப்புற வாகனங்களை கையாள்வது தொடர்பான முக்கிய தீர்மானங்கள் எடுக்கும் போது போக்குவரத்து அமைச்சை பிரதானமாக கொண்டு அந்த தீர்மானங்களை எடுப்பதன் ஊடாக முறைகேடுகளை தவிர்க்க முடியும் என்பது உறுப்பினர்களின் கருத்தாக இருந்தது. சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் வெற்றிடங்களுக்கு குறைந்த வருமான குடும்பங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் தகுதிவாய்ந்தவர்களை விரைவாக இணைத்துக்கொள்வதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். நவீன வாகனங்களில் காணப்படும் உயர் தொழிநுட்பம் வாய்ந்த உபகரணங்கள் தொடர்பில் அரச அலுவலகங்களில் பணியாற்றும் சாரதிகளுக்கு அறிவுறுத்தும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட வேண்டும் என ஆலோசனைக் குழுக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் யோசனை முன்வைத்தனர். இவ்வாறு உபகரணங்கள் தொடர்பில் சாரதிகளிடம் காணப்படும் போதிய அறிவின்மையால் நவீன வாகனங்களின் நிலைமை மிக விரைவாக சேதமடைவதாக உறுப்பினர்களின் கருத்தாக இருந்தது.

ஒன்லைன் முறையில் புகையிரத பயணச்சீட்டுக்களை ஒதுக்கும் போது உள்ள சிரமங்கள் குறித்து உறுப்பினர்கள் இங்கு கருத்துத் தெரிவித்ததுடன், இது தொடர்பில் கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இராஜாங்க அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துக்களைக் குறைக்க தேவையான பரிந்துரைகளை வழங்க பாராளுமன்ற தெரிவுக் குழுவொன்று நியமிக்கப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், பயணிகள் போக்குவரத்து பஸ் சாரதிகளுக்கு விசேட சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் அமைச்சு ஆராய்ந்து வருவதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

இந்தக்கூட்டத்தில் போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே, இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, பாராளுமன்ற உறுப்பினர்களான சந்திம வீரக்கொடி, ரிஷாட் பதியுதீன், அஷோக் அபேசிங்க, எஸ். கஜேந்திரன், குணசிங்கம் திலீபன், அலி சப்ரி ரஹீம், சமனப்பிரிய ஹேரத், உபுல் மஹேந்திர ராஜபக்ஷ, சாந்த பண்டார, சுதத் மஞ்சுள, மதுர விதானகே, எச். நந்தசேன, பைஸல் காசீம், அகில எல்லாவல, கோகிலா குணவர்தன, வைத்தியர் உபுல் கலப்பத்தி மற்றும் போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Comments

Popular posts from this blog

எரிபொருள் தாங்கி வெடித்ததில் 91 பேர் உயிரிழப்பு!

  சியரா லியோன் தலைநகர் ப்ரீடவுனில் எரிபொருள் தாங்கியொன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 91 பேர் உயிரிழந்துள்ளனர். எரிபொருள் கொள்கலன் தீப்பற்றுவதற்கு முன்னர், அதிலிருந்த எரிபொருள் கசிந்தமையால் பரபரப்பான குறித்த வீதியில் பயணித்த வாகனங்கள் தீப்பற்றியுள்ளன. கொள்கலனிலிருந்து எரிபொருள் கசிந்ததை தொடர்ந்து அதனை சேகரிப்பதற்காக சாரதிகள் முற்பட்ட வேளையில், வாகன நெரிசல் ஏற்பட்டதாகவும் இதன்போதே திடீரென தீப்பற்றியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்து குறித்த செய்திகளை வெளியிட்டுள்ள உள்ளூர் ஊடகங்கள், விபத்துக்குள்ளான வாகனங்களை சுற்றி சடலங்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளன. விபத்து குறித்து தமது கவலையை வெளியிட்டுள்ள ஜனாதிபதி ஜூலியஸ் மடா பயோ, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

கொரோனா மரணத்தை தடுக்கும் மாத்திரை கண்டுபிடிப்பு!

  கொரோனா சிகிச்சைக்காக தாங்கள் உருவாக்கியுள்ள மாத்திரை, அந்த நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அபாயத்தையும் உயிரிழப்பு அபாயத்தையும் 90 சதவீதம் வரை குறைக்கும் என்று அமெரிக்காவின் ஃபைஸா் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து, நிறுவனம் வெளியிட்டுள்ள அந்த மருந்தின் ஆய்வு முடிவுகள் தெரிவிப்பதாவது: எங்களின் கொரோனா சிகிச்சை மாத்திரை 775 பெரியவா்களுக்குக் கொடுத்து சோதித்துப் பாா்க்கப்பட்டது. ஆய்வில் பங்கேற்ற அனைவரும், அதற்கு முன்னா் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் ஆவா். அந்த ஆய்வின்போது, எங்களின் கொரோனா சிகிச்சை மாத்திரையுடன் மற்றொரு தீநுண்மி எதிா்ப்பு மருந்தும் பங்கேற்பாளா்களுக்கு அளிக்கப்பட்டது. அதில், கொரோனா சிகிச்சை மாத்திரை பெற்றுக் கொண்ட குழுவினருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய அளவுக்கு நோய் தீவிரமடையும் அபாயம் 89 சதவீதம் குறைந்தது தெரிய வந்தது. மேலும், அந்தக் குழுவில் யாரும் ககொரோனாவுக்கு பலியாகவில்லை. சிகிச்சை மாத்திரை அளிக்கப்பட்டவா்களில் 1 சதவீதத்துக்கும் குறைவானவா்களே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அதே நேரம், எங்களின் கொரோனா மாத்திரையைப் பயன்படுத...

இரண்டு மாதங்களில் கொரோனா வைரஸின் மற்றொரு அலை – மருத்துவ அதிகாரிகள் சங்கம்

  அடுத்த இரண்டு மாதங்களில் மேலும் ஒரு கொரோனா தொற்று அலைக்கு நாடு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரச நிறுவனங்களிலும் சுகாதார நடைமுறைகள் புறக்கணிக்கப்படுவதை அவதானிக்க முடிந்துள்ளதாக அச்சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் வைத்தியர் ருவன் ஜயசூரிய தெரிவித்தார். பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் கொரோனா தொற்று முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட நிலையில் போராட்டங்கள் மற்றும் அதிகளவில் மக்களின் ஒன்றுகூடல்களை அவதானிக்க முடிந்துள்ளது என்றும் குறிப்பிட்டார். இந்நிலைமை காரணமாக எதிர்வரும் காலங்களில் இலங்கையானது கொரோனா வைரஸின் மற்றுமொரு அலையை எதிர்கொள்ளக்கூடும் என்றும் வைத்தியர் ருவன் ஜயசூரிய கூறினார். எவ்வாறாயினும், இலங்கையின் 60% க்கும் அதிகமானவர்கள் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளமையினால் வைரஸிலிருந்து பாதுகாப்பாக இருக்க முடியும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். இருப்பினும் வைரஸின் புதிய மாறுபாடுகள் உருவாகி வருவதாகக் கூறிய வைத்தியர் ருவன் ஜயசூரிய, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார்